Pages

Sunday, 31 March 2019

உடன்பிறவாச் சோதரி


உன்னை முதல்முறை  கண்டபோது எண்ணினேன்
சிறுமிக்கு எவரடா சேலை கட்டிவிட்டதென
அப்போது அறிந்து வைத்திருக்கவில்லை  - நீ
எனையே மகவென ஆக்க வல்லவள் என்று

ஒரு மதிய விருந்தன்று அருகமர்ந்து பேசினோம்.
அன்றே நீ  ஒரு வயது மிகுத்தவள் என்றறிந்தேன்
நான் கண்ட பெண்களிலே மதி மிகக் கொண்டவள் நீ
நின் புத்தகக் காதலே உனையென் தோழி என்றாக்கியது.
பெண்களிடம் என் பலவீனம் பகிர்கிறவன் இல்லை நான்
உன்னிடமோ என் கதை முழுதும் இருநாளுள் பகிர்ந்தேன்
பின்னமர்ந்து சிந்திக்கும் போதே காரணம் உணர்ந்தேன்
என் ஆழ்மனம் விழைந்த என் தமக்கை உரு நீயென
அதன் பின் நீ எனக்கு அக்காவென்று ஆனாய்

என் சிந்தையை தெளிவு செய்தாய் பாதையை தெரியவைத்தாய்
என்னையும் பின் இப்புவியையும் வெல்லும் முனைப்புத்  தந்தாய்
இருந்தும் உனை நான்  சில நேரம் வெறுப்பது உண்டு
காரணம் எனக்குப்  பெரும் இடர் ஒன்றும் தந்தவள் நீ
அம்மா போலெனக்கு அன்பான மனைவி வேண்டுமென்றேன்
இப்போது உன் போல் அறிவும் கட்டாயம் வேண்டும் என்பேன்
உன்போல் அறிவான பெண்ணுக்கு நான் எங்கேதான் போவது ?
என் திருமணம் தாமதித்தால் நீயே அதற்கு முழுமுதல் காரணம்
பழிதவிர்க்க விரும்பின் இப்போதிருந்தே பெண்தேடப் புறப்படு

சிலநேரம் நான் எண்ணிப் புன்னகைப்பதுண்டு
பலருக்கு நீயோ புதிரெனத் தெரிகின்றாய் - ஆனால்
எனக்கோ நீ விடையென இருக்கின்றாய் என
இன்னும் உன்னிடம் சொல்லாத ஒன்றுண்டு
சிலநேரம் புருவம் உயர்த்தி  பேசும் உன்
சர்வாதிகாரி பார்வை கண்டால் எனக்குப் பயம்

உன் முகத்து மகிழ்ச்சி ஒன்றே நான் காண விழைவது
உன்னவன் என்றும் அதை குறைவிலாது உனக்களிப்பான்
தன் பெண்ணைக்  கொண்டவன் தந்தைக்கு எதிரி என்பர்
ஆனால் தம்பிக்கும் அவ்விதமே என்றுணர்ந்தேன்
அவன் நான் மிக நேசிக்கும் ஆரத்தழுவ விரும்பும் எதிரி
பொறுத்திருப்போம்! காலம் மட்டும் கனிவு செய்தால்
உனக்கொரு மகனும் எனக்கொரு மகளும் பிறந்தால்
ஓர் நாள் நாம் மெய்மையிலும் உறவாவோம்

நீ மட்டும் என்னுடன் பிறந்திருந்தால் - இன்று
இவ்வுலகே  என் கால்கீழ் இருந்திருக்கும்
இப்போதும் தாழ்வில்லை - இனியேனும்
நான் மண்சேரும் வரை என்னோடிரு
எனக்கினி அன்பு அருள் அளி அனைத்தும் நீ தா !

- குமரன்  (30/03/2019)

No comments:

Post a Comment