Sunday, 5 May 2019

வெய்யோள்


கவிஞர் பலர் பெண்களை நிலவென்பர்
ஆனால் என் இணையவளே நீ நிலவல்ல - காரணம்
எவர் எண்ணத்தை பிரதிபலிப்பவள் இல்லை நீ
ஒளியெனத் துலங்கும் சுயமதி கொண்டவள்.
எவர் சார்ந்தும் உன் இயக்கம் இல்லை
உன் ஈர்ப்பாலே என் உலகு சுழல்கிறது
யாருக்கும் நீ காட்டும் முகம் ஒன்றே
உன் புறத்தே இருள் முகம் என ஏதுமில்லை
ஆயிரம் அதிசயங்களை மறைத்து வைத்திருப்பாய்
உன்னுள் நுழைந்து அதை அறிந்தவர் எவருமிலர் - ஆகவே
என்னவளே நீ வளர்ந்து தேயும் நிலவல்ல ஒளி குன்றாச் சூரியன்

- குமரன் (03/05/2019)

Saturday, 4 May 2019

மகிழ்ச்சி


எச்சில் வழிய என் விரல் பற்றும்
சிறுமகவின் தொடுகையில்
பனி  உறங்கும் புற்களின் மேல்
வெறும் காலில் நடக்க வரும் சில்லிடலில்
ஜன்னலை முத்தமிடும்  மழையோசையைக்
கேட்டபடி பருகும் சூடான தேநீரில்
மழை ஓய்ந்த  பின் மண்வாசனையை
நுகர்ந்தபடி செல்லும் குறுநடையில்
நட்சத்திரங்கள்  நிறைந்த வானை ரசித்தபடி
கொள்ளும் மொட்டைமாடி உறக்கத்தில் என
எனைச் சுற்றி எங்கும் மகிழ்ச்சியே.

- குமரன் (04/05/2019)

Saturday, 13 April 2019

இரு கொலைகள்

நான் எழுதிய கவிதையை
இதயம் கவர்ந்தவளுக்கு காட்டினேன்
அண்ணா!  இந்தக் கவிதை புரியவில்லை என்றாள்
என்னுள் இருந்த கவியும் காதலனும் ஒருசேர மரித்தனர்.

- குமரன் (13/04/2019) 


Friday, 12 April 2019

நிகரில்லாதவள்


ஒவ்வொரு ஆணும் விழையும் பெண்கள் இருவர்
தன்னை ஆணென உணரவைக்கும் ஒருத்தி
தன்னை மகவென  ஏந்திக்கொள்ளும் பிறிதொருத்தி
இவையிரண்டும் ஒருங்கே கொண்டவள் நீ
உன் மனதமர்ந்தவன் முழு உலகையும் வென்றவனாவான்
பின் இங்கு அவன் கொள்ள பிறிதொன்றில்லை - ஆம்
நான் வென்று தருக்க நினைத்த களத்தில் வென்றுவிட்டேன்
இனி இப்புவியில் நான் வெல்லவோ அடையவோ வேறேதுமில்லை

- குமரன் (12/04/2019)

Sunday, 31 March 2019

உடன்பிறவாச் சோதரி


உன்னை முதல்முறை  கண்டபோது எண்ணினேன்
சிறுமிக்கு எவரடா சேலை கட்டிவிட்டதென
அப்போது அறிந்து வைத்திருக்கவில்லை  - நீ
எனையே மகவென ஆக்க வல்லவள் என்று

ஒரு மதிய விருந்தன்று அருகமர்ந்து பேசினோம்.
அன்றே நீ  ஒரு வயது மிகுத்தவள் என்றறிந்தேன்
நான் கண்ட பெண்களிலே மதி மிகக் கொண்டவள் நீ
நின் புத்தகக் காதலே உனையென் தோழி என்றாக்கியது.
பெண்களிடம் என் பலவீனம் பகிர்கிறவன் இல்லை நான்
உன்னிடமோ என் கதை முழுதும் இருநாளுள் பகிர்ந்தேன்
பின்னமர்ந்து சிந்திக்கும் போதே காரணம் உணர்ந்தேன்
என் ஆழ்மனம் விழைந்த என் தமக்கை உரு நீயென
அதன் பின் நீ எனக்கு அக்காவென்று ஆனாய்

என் சிந்தையை தெளிவு செய்தாய் பாதையை தெரியவைத்தாய்
என்னையும் பின் இப்புவியையும் வெல்லும் முனைப்புத்  தந்தாய்
இருந்தும் உனை நான்  சில நேரம் வெறுப்பது உண்டு
காரணம் எனக்குப்  பெரும் இடர் ஒன்றும் தந்தவள் நீ
அம்மா போலெனக்கு அன்பான மனைவி வேண்டுமென்றேன்
இப்போது உன் போல் அறிவும் கட்டாயம் வேண்டும் என்பேன்
உன்போல் அறிவான பெண்ணுக்கு நான் எங்கேதான் போவது ?
என் திருமணம் தாமதித்தால் நீயே அதற்கு முழுமுதல் காரணம்
பழிதவிர்க்க விரும்பின் இப்போதிருந்தே பெண்தேடப் புறப்படு

சிலநேரம் நான் எண்ணிப் புன்னகைப்பதுண்டு
பலருக்கு நீயோ புதிரெனத் தெரிகின்றாய் - ஆனால்
எனக்கோ நீ விடையென இருக்கின்றாய் என
இன்னும் உன்னிடம் சொல்லாத ஒன்றுண்டு
சிலநேரம் புருவம் உயர்த்தி  பேசும் உன்
சர்வாதிகாரி பார்வை கண்டால் எனக்குப் பயம்

உன் முகத்து மகிழ்ச்சி ஒன்றே நான் காண விழைவது
உன்னவன் என்றும் அதை குறைவிலாது உனக்களிப்பான்
தன் பெண்ணைக்  கொண்டவன் தந்தைக்கு எதிரி என்பர்
ஆனால் தம்பிக்கும் அவ்விதமே என்றுணர்ந்தேன்
அவன் நான் மிக நேசிக்கும் ஆரத்தழுவ விரும்பும் எதிரி
பொறுத்திருப்போம்! காலம் மட்டும் கனிவு செய்தால்
உனக்கொரு மகனும் எனக்கொரு மகளும் பிறந்தால்
ஓர் நாள் நாம் மெய்மையிலும் உறவாவோம்

நீ மட்டும் என்னுடன் பிறந்திருந்தால் - இன்று
இவ்வுலகே  என் கால்கீழ் இருந்திருக்கும்
இப்போதும் தாழ்வில்லை - இனியேனும்
நான் மண்சேரும் வரை என்னோடிரு
எனக்கினி அன்பு அருள் அளி அனைத்தும் நீ தா !

- குமரன்  (30/03/2019)

Saturday, 30 March 2019

காத்திருப்பு


இப்போது விதையென மண்ணுக்குள்  பொறுத்திரு
ஓர் நாள் பெரும் கிளை விரித்து  மரமென்றாவாய்
ஆழத்தில்  தன்னை புதைத்துக்கொள்ளும் கற்கள்
பின் ஒளி கொண்டு வைரமென்றாவதைப் போல !

- குமரன்  (30/03/2019)

Friday, 22 March 2019

தோற்றும் வெல்தல்


தோல்வி கண்டு துயர் கொள்பவன் இல்லை நான்
துயர் என்பது யாரிடம் தோற்கிறோம் என்பதை பொறுத்தது
என் வலி மட்டும் கொண்டு நான் களம் நிற்க - அவனோ
செல்வாக்கென்னும் படைகொண்டு எதிர் நிற்கின்றான்

அக்களத் தோல்வியே எனக்கு வலி மிகத் தருவது
அக்களத் தோல்வியே எனக்கு வலி மிகத் தருவது

அவன் தன் வலி மட்டும் சூடி எதிர் நிற்பின்
என்னிலும் பண்மையும் கொண்டிருப்பின்
புன்முறுவலோடு வாள் தாழ்த்துகின்றேன்
அத்திசை இருந்து எவ் இளிவரல் எழினும்

காரணம் அவனில் தெரிவது யானே யாம்
அவனிடம் பொருதல் என்னிடம் பொருதல் போல்
அளியென அவனுக்கு என் வெற்றியைத் தருகிறேன்
அக்களங்களில் என் தோல்வியும் வெற்றியே

- குமரன் (22/03/2019)