Saturday, 19 July 2025

இறந்த மொழியின் இறவாக்கவிஞன்

தன் காவியத்தை தானே நெருப்பிலிட்டு அழித்த காவிய மேதை குணாட்யன் நினைவுகள் என்னை ஒரு வாரமாக அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது. ஆராய்ச்சியாளர்கள் அந்நூல் கிடைத்திருந்தால் அதுதான் மானுடத்தின் மிகப்பெரிய தொல்நூலாக இருந்திருக்கும் என கருதுகிறார்கள். அவர் எழுதிய பைசாசி என்கிற மொழி, ஒரு மர்மமான மொழி.

அந்த மொழியை குறிக்கும் பைசாசி எனும் பெயர் கூட பிசாசு என்ற சொல்லிலிருந்து வந்ததுதான் எனும் போது, அந்த மொழியும் அதைப் பேசிய மக்களும் எவ்வாறு பிற சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டனர் என்று நீங்களே மதிப்பீடு செய்யலாம்.
பைசாசி பேசப்பட்டது என்பதற்கோ, எழுதப்பட்டது என்பதற்கோ எந்த வரலாற்றுச் சான்றும் இல்லை. ஆனால் அப்படி ஒரு தொல் மொழி இருந்தது அந்த மொழியில் பேரிலக்கியங்கள் இருந்தது என்பதற்காக ஒரே சாட்சி ப்ரஹத்கதா (பெருங்கதை) என்ற காவியமும் அதை எழுதிய குணாட்யன் என்ற கவிஞனும்.
ஆனால் அந்த நூலில் ஒரு வரியும் நம்மிடம் இல்லை. அப்படி ஒரு நூல் இருந்தது என்பதுக்குச் சான்று அதை நூலைத் தழுவி பிறமொழிகளில் எழுதப்பட்ட காவியங்கள். தமிழில் ஏழாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பெருங்கதை, சமஸ்கிருதத்தில் கதாசரிதசாகரம் , பிராகிருதத்தில் வசுதேவஹிந்தி போன்ற என்று பல்வேறு காவியங்களில் ப்ரஹத்கதா நூலின் கதைகள் குறித்த குறிப்புகள் உள்ளது.

குணாட்யன் பற்றிய வாழ்க்கை குறிப்பு அவரது நூலின் சமஸ்கிருத தழுவலான கதாசரிதசாகரத்தில் உள்ளது. குணாட்யன் ப்ரஹத்கதாவை ஆறு லட்சம் பாடல்களுடன் எழுதி முடிக்கிறார். ஆனால் அவர் எழுதிய மொழியோ சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட பைசாசி மொழி. சாதவாகன அரசரின் அவையில் அந்த நூலை அறிமுகப்படுத்தும் போது, அறிஞர்கள் அந்த மொழியை அருவருப்பானதாகக் கூறி நிராகரித்தனர்.
மனமுடைந்த குணாட்யன் காட்டுக்குள் சென்று சிதை மூட்டி, அதில் தன்னுடைய பெருங்காவியத்தை ஒவ்வொரு பாடலாக வாசித்துத் தீயிட்டார். காட்டுக்கு வேட்டைக்குச் சென்ற சாதவாகன அரசன், விலங்குகள் கூட அமைதியாக அமர்ந்து அந்தக் காவியத்தைக் கேட்டதைப் பார்த்ததும், அந்தக் காவியத்தின் மகத்துவத்தை உணர்ந்தான்.
ஓடிப் போய் குணாட்யனைத் தடுத்தான். ஆனால், பெருங்காவியத்தின் ஏழு காண்டங்களில் ஆறு காண்டங்கள் தீயில் அழிந்துவிட்டன. ஒன்று மட்டுமே எஞ்சியது. குணாட்யரும் தீயில் பாய்ந்து இறந்தார் என்கிறது அந்த சமஸ்கிருத நூல்.
அந்த ஒரு காண்டத்திலுள்ள கதைகளே தமிழ் உட்படப் பிற மொழிகளில் எஞ்சுகின்றன. பிருஹத்கதாவின் முழுமையான உள்ளடக்கம் இன்றுவரை யாருக்கும் தெரியாது. இந்நூலில் மொத்தம் எத்தனை கதைகள் இருந்தன என்று தெரியவில்லை.
பிற்காலத்தில் தமிழ் உட்படப் பல மொழிக் காவியங்களின் கருப்பொருளாகத் திகழ்ந்த உதயணன் கதை போன்ற பல கதைகள் அடங்கிய மாபெரும் கதை தொகுப்பு அது. வட இந்திய மொழிகளான சமஸ்கிருதம், பிராகிருதம், பாலி ஆகிய மொழிகளுக்கெல்லாம் அடிப்படையாகப் பழங்குடி மொழிகள் இருந்துள்ளன என்பதற்கும், அவற்றில் பேரிலக்கியங்கள் உருவாயின என்பதற்கும் பிருஹத்கதாவே சான்று என மொழியியலாளர்கள் கருதுகின்றனர்.
ஒரு எழுத்தாளனின் சொற்கள் மறைந்த பிறகும், அவன் மொழி அழிந்த பிறகும் அவனை நினைவுகூரும் மனித மனத்தின் ஆழமான உணர்வுகள் பற்றி எண்ணி வியக்காமல் இருக்கமுடியவில்லை. அந்த உணர்வில்தான் குணாட்யன் இன்னும் வாழ்கிறார். பைசாசியும் கூட. மானுட நினைவுகளில் ஒரு வாசகமுமின்றி நிலைத்திருக்கிற இறந்த மொழியின் இறவாக் கவிஞனுக்கு என் வணக்கங்கள்.

No comments:

Post a Comment