Showing posts with label Poetry. Show all posts
Showing posts with label Poetry. Show all posts

Monday, 11 September 2023

கவிதை நீ கவிஞன் நான்

சொல்லில் தெய்வம் எழும்
கணம் உண்டென்றனர் அறவோர்
சொல்லெலாம் பொருளிழக்கும்
கணம் உண்டென்றனர் அறிவோர்

அவ்விரண்டின்  மெய்மை உணர்ந்தது
உனைக் கண்டு மட்டுமே

என் சொல்லின் உருவம் நீ!
என் சொல்லின் மௌனமும் நீ!

 - குமரன்

Sunday, 7 May 2023

பிறந்தநாள் வாழ்த்து

நீண்ட நாட்களுக்கு பிறகு நான் எழுதிய மரபுக் கவிதை. இது அறுசீர் விருத்தம் என்ற வகைமையுள் வரும் கவிதை. தமிழின் பாவகைகளுள் ஒன்றான ஆசிரியபாவின் இனங்களில் ஒன்று. இது அளவொத்த நான்கடிகளில் அமையும். ஒவ்வொரு அடியும் அறுசீர் கொண்டு அமையும். மோனை வெளித்தெரியுமாறு அடிகள் இரண்டாக மடக்கி எழுதப்படும்.


காரையம் பதியில் தோன்றி

    கவின்சுவிஸ் வாழ்க்கை கண்டு

பாரையும் விண்ணும் சேர்த்து 

    பண்பினால் ஆளும் அண்ணன்

மோரையும் ஒத்த வண்ண 

    மனதினை கொண்ட மன்னன்

சீரையும் சிறப்பும் கண்டு 

    செகந்தனில் நிறைக மாதோ!


- குகதாசன் குமரன் (06/05/2023)

Friday, 30 October 2020

தவம்


விலங்கிடப் பட்டிருக்கும்  கிளியே 
இந்த வானம் காத்திருக்கிறது
நீ உன் தளை அறுத்து சிறகு விரித்து
தனைச் சேரும் காலம் நோக்கி.

- குமரன் (30/09/2020)

Tuesday, 18 February 2020

முதற்பிரிவு


அவள் சொல்லிச் சென்றாள்
நாளை உதிர்வோம் என்று தெரிந்தும்
ஒன்றாய் மலர்ந்தவர் தானே நாம்
உன் நெருடலுக்கும் கவலைக்கும்
இவ்வுறவில் எப்பொருளும் இல்லை
இது நாம் உதிரும் கணம் அவ்வளவே என!

- குமரன் (18/02/2020)

Monday, 17 February 2020

நாளெல்லாம் காதல்


ஞாயிறு உன் கண்ணொளி கண்டு கூசுமோ
திங்கள் உன் வெண்மை கண்டு நாணுமோ
செவ்வாய் திறந்து நீ என்னை அருந்து
என் எல்லாப் பிணிக்கும் நீ நீயே மருந்து

- குமரன் (17/02/2020)

Thursday, 23 May 2019

கொல்வேல் அரசி


பலபொழுது எண்ணியதுண்டு தோழி
நீ என் கைச்சிறைக்குள் இருக்கும்போதும்
எங்கோ நானறியா தொலைவில் இருப்பதாய்
என்னை முற்றும் அறிந்தவள் நீ - உன்னை
சற்றும் நெருங்கி அறியமுடியாதவன் நான்

தொலைவிருக்கையில் பெண் என ஒருமை கொள்கிறாய்
அருகணைகையில் அன்னை தோழி என இருமைகொள்கிறாய்
அறிவுரைக்கையில் அன்னை அணைத்திருக்கையில் தோழி
வெல்லமுடியாதவள் நீ ! ஆனால் தினமும் வெல்ல வாய்ப்பும் தருபவள்
ஒளியது நாடி உயிர்தரும் அந்தென உனைநோக்கி எனை ஈர்ப்பதும் அஃதே

 - குமரன் (20/03/2019)

Wednesday, 22 May 2019

என்னவள்



தலைக்கனம் மிகுந்தவள் என அவளை அறிமுகம் செய்தனர்
ஏக்கம் கவலை முறைப்பாடு என எதுவும் இல்லை அவளுக்கு
காற்று போல் எங்கும் சிறைப்படாமல் கட்டற்று இருப்பாள்
ஆணெனும் கர்வத்தை சீண்டும் நிமிர்வுள்ளவள் அவள்
புண்படாமல்  எவரும் அவளை அணுக முடியாது
அவள் கர்வமே முதலில் என்னை அவள்பால் ஈர்த்தது

புத்தகங்கள் மிகவும் பிடிக்கும் அவளுக்கு
அதைப் பற்றி மணிக்கணக்கில் கண்கள் விரியப்  பேசுவாள்
நாங்கள் கைகோர்த்து களித்திருந்த நாட்களை விட
நூல் பேசி மகிழ்ந்திருந்த நாட்களே அதிகம்

இவ்வளவு படிக்கும் நீ  எழுதினால் தான் என்ன என்றேன்
சுவைக்கத்  தான் பிடிக்கும் சமைக்கத்  தெரியாதென்றாள்
விளையாட்டாய் நானும்  சமையல் தெரியாதா ?
என்பாடு பின் திண்டாட்டம் தான் என்றேன்
ஏன் பெண்கள் தான் சமைக்க வேண்டுமோ ?
போடா ! நீயும் எல்லா ஆண்களையும் போல்தான் எனச் சினந்தாள்
பின் என்ன நான் அவள் தீயணைக்கப்  போராடி தாழாமல்
மண்டியிட்டு பிழை பொறுக்கக்  கோரினேன்.
ஆண்களை பாதம் பணிய வைப்பதில் பெண்களுக்கு
என்ன தான் மகிழ்ச்சியோ ?

என்னிடம் மிகப் பிடித்தது என்ன என்று கேட்டேன்
குழந்தை ஆண்மகன் என தருணமறிந்து மாறக் கற்றவன் நீ என்றாள்
அன்று ஒருநாள் தனைப் பற்றி கவி ஒன்று பாட ஆணையிட்டாள்
கவிஞனின் கர்வம் சிவனுக்கும் பணியாதென்றேன்
என் காதலை பாடாத நீயென்ன கவிஞன் என்றாள்.
இன்றோ என் எல்லா கவிதைக்கும் அவளே பாட்டுடைத்  தலைவி

அவளிடம் பேசி என்றும் வென்றதில்லை நான்
எல்லா கேள்விகளுக்கும் பதில் ஒன்று வைத்திருப்பாள்
நிறையப்  பேசுவோம் ! ஆனால் சொற்களின் பொருளின்மையை
கற்றுத்  தந்தவளும் அவளே !

அவள் மனதை வென்றதுவே
என் வெற்றிகளில் முதன்மையானது
அவள் கரம் கோரும் போது எவ்விதத்திலும்
அவளுக்கு நிகர் உள்ளவன் இல்லை நான்
இருந்தும்  எனை நம்பி தனையே முழுதளித்தவள் அவள்
இன்று நான் பெற்றதனைத்தும் அவள் அன்பின் கொடை
அவளின் மகிழ்ச்சி ஒன்றே இனி என் வாழ்வின்
இலக்கு, பொருள், புகழ் அனைத்தும் !

கதிரொளி முகம் தழுவ கனவில் இருந்து விழித்துக் கொண்டேன்
நான் இன்னும் சந்திக்காத என் கனவு நாயகியே !
சற்றுப்  பொறுத்திரு ! உன்னை ஓர்நாள் நான் முழுதறிவேன்
முதலில் கருத்தால் பின் என் கரத்தால் !!!

- குமரன் (13/04/2019)

Friday, 17 May 2019

அழகி

உனை அழகி என்று பலர் உடன் சொல்லக் கேட்டிருப்பாய்
விந்தை தான்! எனக்கோ அதைக்  காண பொழுது பல ஆனது
பல கண்கள் காணாத, நான் மட்டும் தரிசித்த உன் அக அழகின்
கண் கூசும் ஒளியில் தெரியவில்லையோ என்னவோ.

- குமரன் (06/02/2020)

Sunday, 5 May 2019

வெய்யோள்


கவிஞர் பலர் பெண்களை நிலவென்பர்
ஆனால் என் இணையவளே நீ நிலவல்ல - காரணம்
எவர் எண்ணத்தை பிரதிபலிப்பவள் இல்லை நீ
ஒளியெனத் துலங்கும் சுயமதி கொண்டவள்.
எவர் சார்ந்தும் உன் இயக்கம் இல்லை
உன் ஈர்ப்பாலே என் உலகு சுழல்கிறது
யாருக்கும் நீ காட்டும் முகம் ஒன்றே
உன் புறத்தே இருள் முகம் என ஏதுமில்லை
ஆயிரம் அதிசயங்களை மறைத்து வைத்திருப்பாய்
உன்னுள் நுழைந்து அதை அறிந்தவர் எவருமிலர் - ஆகவே
என்னவளே நீ வளர்ந்து தேயும் நிலவல்ல ஒளி குன்றாச் சூரியன்

- குமரன் (03/05/2019)

Saturday, 4 May 2019

மகிழ்ச்சி


எச்சில் வழிய என் விரல் பற்றும்
சிறுமகவின் தொடுகையில்
பனி  உறங்கும் புற்களின் மேல்
வெறும் காலில் நடக்க வரும் சில்லிடலில்
ஜன்னலை முத்தமிடும்  மழையோசையைக்
கேட்டபடி பருகும் சூடான தேநீரில்
மழை ஓய்ந்த  பின் மண்வாசனையை
நுகர்ந்தபடி செல்லும் குறுநடையில்
நட்சத்திரங்கள்  நிறைந்த வானை ரசித்தபடி
கொள்ளும் மொட்டைமாடி உறக்கத்தில் என
எனைச் சுற்றி எங்கும் மகிழ்ச்சியே.

- குமரன் (04/05/2019)

Saturday, 13 April 2019

இரு கொலைகள்

நான் எழுதிய கவிதையை
இதயம் கவர்ந்தவளுக்கு காட்டினேன்
அண்ணா!  இந்தக் கவிதை புரியவில்லை என்றாள்
என்னுள் இருந்த கவியும் காதலனும் ஒருசேர மரித்தனர்.

- குமரன் (13/04/2019) 


Friday, 12 April 2019

நிகரில்லாதவள்


ஒவ்வொரு ஆணும் விழையும் பெண்கள் இருவர்
தன்னை ஆணென உணரவைக்கும் ஒருத்தி
தன்னை மகவென  ஏந்திக்கொள்ளும் பிறிதொருத்தி
இவையிரண்டும் ஒருங்கே கொண்டவள் நீ
உன் மனதமர்ந்தவன் முழு உலகையும் வென்றவனாவான்
பின் இங்கு அவன் கொள்ள பிறிதொன்றில்லை - ஆம்
நான் வென்று தருக்க நினைத்த களத்தில் வென்றுவிட்டேன்
இனி இப்புவியில் நான் வெல்லவோ அடையவோ வேறேதுமில்லை

- குமரன் (12/04/2019)

Sunday, 31 March 2019

உடன்பிறவாச் சோதரி


உன்னை முதல்முறை  கண்டபோது எண்ணினேன்
சிறுமிக்கு எவரடா சேலை கட்டிவிட்டதென
அப்போது அறிந்து வைத்திருக்கவில்லை  - நீ
எனையே மகவென ஆக்க வல்லவள் என்று

ஒரு மதிய விருந்தன்று அருகமர்ந்து பேசினோம்.
அன்றே நீ  ஒரு வயது மிகுத்தவள் என்றறிந்தேன்
நான் கண்ட பெண்களிலே மதி மிகக் கொண்டவள் நீ
நின் புத்தகக் காதலே உனையென் தோழி என்றாக்கியது.
பெண்களிடம் என் பலவீனம் பகிர்கிறவன் இல்லை நான்
உன்னிடமோ என் கதை முழுதும் இருநாளுள் பகிர்ந்தேன்
பின்னமர்ந்து சிந்திக்கும் போதே காரணம் உணர்ந்தேன்
என் ஆழ்மனம் விழைந்த என் தமக்கை உரு நீயென
அதன் பின் நீ எனக்கு அக்காவென்று ஆனாய்

என் சிந்தையை தெளிவு செய்தாய் பாதையை தெரியவைத்தாய்
என்னையும் பின் இப்புவியையும் வெல்லும் முனைப்புத்  தந்தாய்
இருந்தும் உனை நான்  சில நேரம் வெறுப்பது உண்டு
காரணம் எனக்குப்  பெரும் இடர் ஒன்றும் தந்தவள் நீ
அம்மா போலெனக்கு அன்பான மனைவி வேண்டுமென்றேன்
இப்போது உன் போல் அறிவும் கட்டாயம் வேண்டும் என்பேன்
உன்போல் அறிவான பெண்ணுக்கு நான் எங்கேதான் போவது ?
என் திருமணம் தாமதித்தால் நீயே அதற்கு முழுமுதல் காரணம்
பழிதவிர்க்க விரும்பின் இப்போதிருந்தே பெண்தேடப் புறப்படு

சிலநேரம் நான் எண்ணிப் புன்னகைப்பதுண்டு
பலருக்கு நீயோ புதிரெனத் தெரிகின்றாய் - ஆனால்
எனக்கோ நீ விடையென இருக்கின்றாய் என
இன்னும் உன்னிடம் சொல்லாத ஒன்றுண்டு
சிலநேரம் புருவம் உயர்த்தி  பேசும் உன்
சர்வாதிகாரி பார்வை கண்டால் எனக்குப் பயம்

உன் முகத்து மகிழ்ச்சி ஒன்றே நான் காண விழைவது
உன்னவன் என்றும் அதை குறைவிலாது உனக்களிப்பான்
தன் பெண்ணைக்  கொண்டவன் தந்தைக்கு எதிரி என்பர்
ஆனால் தம்பிக்கும் அவ்விதமே என்றுணர்ந்தேன்
அவன் நான் மிக நேசிக்கும் ஆரத்தழுவ விரும்பும் எதிரி
பொறுத்திருப்போம்! காலம் மட்டும் கனிவு செய்தால்
உனக்கொரு மகனும் எனக்கொரு மகளும் பிறந்தால்
ஓர் நாள் நாம் மெய்மையிலும் உறவாவோம்

நீ மட்டும் என்னுடன் பிறந்திருந்தால் - இன்று
இவ்வுலகே  என் கால்கீழ் இருந்திருக்கும்
இப்போதும் தாழ்வில்லை - இனியேனும்
நான் மண்சேரும் வரை என்னோடிரு
எனக்கினி அன்பு அருள் அளி அனைத்தும் நீ தா !

- குமரன்  (30/03/2019)

Saturday, 30 March 2019

காத்திருப்பு


இப்போது விதையென மண்ணுக்குள்  பொறுத்திரு
ஓர் நாள் பெரும் கிளை விரித்து  மரமென்றாவாய்
ஆழத்தில்  தன்னை புதைத்துக்கொள்ளும் கற்கள்
பின் ஒளி கொண்டு வைரமென்றாவதைப் போல !

- குமரன்  (30/03/2019)

Friday, 22 March 2019

தோற்றும் வெல்தல்


தோல்வி கண்டு துயர் கொள்பவன் இல்லை நான்
துயர் என்பது யாரிடம் தோற்கிறோம் என்பதை பொறுத்தது
என் வலி மட்டும் கொண்டு நான் களம் நிற்க - அவனோ
செல்வாக்கென்னும் படைகொண்டு எதிர் நிற்கின்றான்

அக்களத் தோல்வியே எனக்கு வலி மிகத் தருவது
அக்களத் தோல்வியே எனக்கு வலி மிகத் தருவது

அவன் தன் வலி மட்டும் சூடி எதிர் நிற்பின்
என்னிலும் பண்மையும் கொண்டிருப்பின்
புன்முறுவலோடு வாள் தாழ்த்துகின்றேன்
அத்திசை இருந்து எவ் இளிவரல் எழினும்

காரணம் அவனில் தெரிவது யானே யாம்
அவனிடம் பொருதல் என்னிடம் பொருதல் போல்
அளியென அவனுக்கு என் வெற்றியைத் தருகிறேன்
அக்களங்களில் என் தோல்வியும் வெற்றியே

- குமரன் (22/03/2019)

Saturday, 16 March 2019

வெற்றிச்செல்வி


நிதம் எனை அலைக்கழிக்கும் கேள்வி ஒன்றுண்டு
எனைவிட மதி அதிகம் கொண்டவள் நீ 
எனையெப்படி உன்னவனாக தேர்ந்தெடுத்தாய் ? - போகட்டும் 
இம்முறை மட்டும் உன் தோல்வி என் வெற்றி என்றாகுக 
என் ஆணவம் பணியும் காலடி கொண்டவளே
நின் திருவடியே புகல் எனத் தெளிந்தேன்
உன்னால் புரக்கப்பட்டவன் நான் - இனி
உனையன்றி எனை வெல்ல எவரும் இல்லை
காலம் என்னை களவு செய்யும் வரை
என் விழைவும் வெற்றியும் இனியெப்போதும் உனக்கானவை ! 

- குமரன் (04/03/2019)

Friday, 1 March 2019

பிணிதீர் சிவன்


முடியா வலியால் முனகிய என்னை
அருகே வாயென அன்பொடு அழைத்து
தீரா மனக்குறை தீர்த்த என் சிவனை
பாடாதிருத்தல் பாதகம் தானே

சிவனவன் கழலை சிந்தையில் நிறுத்தி
அவனுடை நாமம் நாவில் இருத்தி
நான் வரையும் பா நற்சொத்தாகிட
நல்லருள் புரிவாய் நமச்சி வாயனே !

குமரன் (05/06/2011)