Pages

Monday, 3 April 2023

பிரிவெனும் பெருவலி



சின்னஞ்சிறு நிலவே
என்னைவிட்டு ஏனடி நீங்கினையோ?
ஒரு கொள்ளை புயலடித்தால் சகியே
செஞ்சுடர் தாங்கிடுமோ?
 
அத்தம் அழிந்ததடி அன்னமே
ரத்தமும் ஓய்ந்ததடி
ஒரு கொற்றமும் வீழ்ந்ததடி சகியே
யாதுமிக்கோள் யானே

யாங்குனை தேடுவனோ?
அன்னமே ஏது நீ செய்குவனோ?
ஓங்கூழானதடி அன்னமே
தீங்கிருள் சூழ்ந்ததடி

துள்ளும் நயனமெங்கே
வெல்லம் போல் சொல்லும் மொழிகள் எங்கே?
கன்னல் சிரிப்பும் எங்கே?
என்னைசேர் ஆரணமார்பும் எங்கே?
 
மஞ்சள்நிலங் குளிராய்
நெஞ்சிலே சேர்ந்திடும் கைகள் எங்கே?
கொஞ்சும் இளம் வெய்யிலாய்
என்னையே தேடிடும் பார்வை எங்கே?
 
கானகம் எரியுதடி
வஞ்சியே ஞாலமும் நழுவுதடி
வானம் உடைந்ததடி
அழகே பூமியும் சரிந்ததடி
 
கொள்ளை நெருப்பினிலே தள்ளியே
எப்படி நீங்கினையோ?
எப்படி குற்றமுற்றேன்?
பிரிவை சாபமாய் தந்தனையோ?

சின்னஞ்சிறு நிலவே
என்னைவிட்டு ஏனடி நீங்கினையோ?
ஒரு கொள்ளை புயலடித்தால் சகியே
செஞ்சுடர் தாங்கிடுமோ?
 
அத்தம் அழிந்ததடி அன்னமே
ரத்தமும் ஓய்ந்ததடி
ஒரு கொற்றமும் வீழ்ந்ததடி சகியே
யாதுமிக்கோள் யானே

No comments:

Post a Comment